2 புதிய தொகுப்புகள் அறிமுகம்: கிராமப்புறங்களில் கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க நடவடிக்கை சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு
கிராமப்புறங்களில் கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க 2 புதிய சேனல் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர் மணிகண்டன் நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-
* தகவல் தொழில்நுட்பவியல் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1 கோடி நிதியை ரூ.5 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டு உள்ளது.
* மாநில தரவு மையத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் அமைக்கப்பட்டு இருக்கும் ‘மேகக் கணினி அமைப்பு’, இனி தனிப்பட்ட அடையாளத்துடன் ‘தமிழ் மேகம்’ என்ற பெயரில் அறியப்படும்.
* ‘எல்காட்’ நிறுவனம் பொருட்களுக்கான இணைய வசதி தொழில்நுட்ப பயன்பாட்டினை உபயோகித்து நவீன தொழில்நுட்ப இல்லங்களை உருவாக்க உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டு உபகரணங்களை செல்போனில் உள்ள செயலி வாயிலாக எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் தொழில்நுட்பத்துடன் கட்டுப்படுத்த முடியும். முதற்கட்டமாக இந்த தொழில்நுட்பம் சென்னை நகரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தேச மதிப்பீடு ரூ.50 லட்சம் ஆகும்.
* தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகள், நிறுவனங்கள், முகமைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறைகளில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பணியாளர்களுக்கும் தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன் தனிநபர் மற்றும் அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகள் tn.gov.in என்ற தள பெயருடன் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் வழங்கப்படும்.
ஒற்றை செல்போன் செயலி
* தமிழக அரசின் ஒற்றை மின்னணு கட்டணம் செலுத்தும் தளம் ரூ.1.60 கோடி மதிப்பில் நிறுவப்பட உள்ளது.
* அனைத்து அரசு துறைகள், நிறுவனங்கள் பயன்படுத்தும் விதத்தில் குறைந்த செலவில் குறுந்தகவல் முகப்புவழி ஒன்றை தமிழ்நாடு மின்னாளுமை முகமை அமைத்திடும். இந்த சேவை ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
* அரசின் அனைத்து சேவைகளையும் திறந்த வலைத்தளம் மூலம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே ஒரே பயனர் குறியீடு மற்றும் கடவு சொல்லுடன் கூடிய மக்களுக்கான ஒரே வலைத்தளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த சேவை ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
* ‘ஸ்மார்ட்’ போன்களின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதால் அரசின் சேவைகள் பொதுமக்களை சென்றடைய ரூ.50 லட்சம் செலவில் ஒரு ஒற்றை செல்போன் செயலி செயல்படுத்தப்படும்.
* அரசு துறைகள், நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் சேவைகள் சார்ந்த விவரங்களை ஒளிபரப்புவதற்கு தேவையான தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டமைப்பு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் உருவாக்கப்படும்.
* தமிழ் இணையக்கல்வி கழகத்தில் முக்கிய செயல்பாடு இணைய வாயிலாக தமிழ்மொழியை உலகம் எங்கும் கற்பிப்பது ஆகும். இந்த நிறுவனத்தை பலப்படுத்தும் வகையில் போதுமான பணியாளர்களுடன் கணினி தமிழ் பிரிவு உருவாக்கப்படும்.
* தமிழ் இணையக் கல்விக்கழகம், அமெரிக்காவில் உள்ள கான் கல்விக்கழகம், வெற்றிவேல் அறக்கட்டளையுடன் ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கான் கல்விக்கழகம் பல்வேறு பாடங்கள் சார்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த காணொலிகளை ஆங்கில மொழியில் கற்பிக்க உருவாக்கி உள்ளது.
கேபிள் டி.வி. கட்டணம்
* தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை கருத்தில் கொண்டு கட்டண சேனல்கள் அடங்கிய 3 கட்டண தொகுப்புகளை உருவாக்கி உள்ளது. அதன்படி தொகுப்பு-1, மொத்த கட்டணம்(142 கட்டணமில்லா சேனல்கள்) ரூ.120+ ரூ.21.60 வரி, தொகுப்பு-2, குடும்ப தொகுப்பு(142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 37 கட்டண சேனல்கள்) ரூ.200.25+ வரி, தொகுப்பு-3, தமிழ் தொகுப்பு (142 கட்டணமில்லா சேனல் கள், 49 கட்டண சேனல்கள்) ரூ.219.99+ வரி ஆகும்.
தற்போது கிராமப்புற மக்கள் விரும்பும் வகையில் குறைந்த கட்டணத்தில் புதிதாக 2 சேனல் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, தொகுப்பு-4, கிராமப்புற தொகுப்பு (142 கட்டணமில்லா சேனல்கள், 12 கட்டண சேனல்கள்) ரூ.170+ வரி, தொகுப்பு-5, தமிழ் தொகுப்பு (142 கட்டணமில்லா சேனல் கள், 28 கட்டண சேனல்கள்) ரூ.180+ வரி ஆகும்.
குறைக்கப்பட்ட கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சேனல் தொகுப்பு-4 மற்றும் 5 மூலம் பொதுமக்கள் டிஜிட்டல் கேபிள் டி.வி. சேவையை குறைந்த கட்டணத்தில் கண்டுகளிக்கலாம்.
மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் மணிகண்டன் வெளியிட்டார்.