வருகிற 15-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுகிறது ஜனாதிபதி நேரில் பார்வையிடுகிறார்
சந்திரயான்-2 விண்கலம் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை,
சந்திரயான்-2 விண்கலம் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்வை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார்.
சந்திரயான்-2 விண்கலம்
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. இதன் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது.
இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி ரூ.1,000 கோடி செலவில் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.
நிலவில் தரையிறங்கும்
இந்த விண்கலம் ஏவும் நடவடிக்கை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வரும் 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சந்திரயான்-2 திட்டத்தின் சிறப்பு அம்சமாக, இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 நவீன சாதனங்கள் அடங்கிய தொகுப்பும் இணைக்கப்பட்டு உள்ளது. இவற்றின் மூலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி ஆய்வு செய்யவும் முடியும். இந்த ரோவர் வாகனத்தை செப்டம்பர் 6-ந்தேதி நிலவில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இறுதிகட்ட பணிகள்
சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு அந்த விண்கலம் மாறும். பின்னர் நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்பட்டு சோதனையில் ஈடுபடும்.
இந்த விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிகட்டப்பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
ராக்கெட்டில் பொருத்தும் பணி
சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பி உலகை திரும்பி பார்க்க வைத்தோம். இந்த விண்கலம் மூலம் நிலவில் நீர் இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்து உலகத்துக்கு சொன்னது. மிகக்குறைந்த செலவில் விண்கலத்தை அனுப்பிய இஸ்ரோவின் செயலை உலகமே பாராட்டியது. சந்திரயான்-1 விண்கலத்தின் ஆயுள் காலம் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவு பெற்றது.
தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. அனைத்து சோதனைகளையும் முடித்து ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மற்றும் சந்திரயான்-2 விண்கலம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. தற்போது ராக்கெட்டில் விண்கலம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுண் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
உலகமே எதிர்பார்ப்பு
3 ஆயிரத்து 290 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இடம் பெற்றுள்ள லேண்டர் கருவிக்கு விக்ரம் என்றும் ரோவர் கருவிக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 வகையான கருவிகள் சந்திரயான்-2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்ணுக்கு சென்ற உடன் தனித்தனியாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன.
குறிப்பாக லேண்டர், நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும். விண்கலத்தில் உள்ள நவீன முப்பரிமாண கேமராக் கள் தேவையான படங்களை எடுத்து அனுப்ப இருக்கின்றன. யாருமே (எந்த நாடுகளும்) போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-2 செல்வது அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது.
இந்த திட்டத்தை இந்தியா மட்டுமின்றி, உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது. சந்திரயான்-2 விண்கலத்திற்கான திட்ட இயக்குனராக வனிதா முத்தையா, துணை செயல்பாடு இயக்குனராக ரீத்து கரிதால் ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் தலைமை ஏற்று இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
ஜனாதிபதி வருகை
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவும் போது அதனை பார்வையிடுவதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவுவதை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தர இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இதைப்போல தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திரா கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிடுகிறார்கள். இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.