நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது நளினி சிதம்பரம்: முதல்வர் பழனிசாமி

நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது நளினி சிதம்பரம் தான். இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

Update: 2019-07-10 07:19 GMT
சென்னை,

சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக திமுக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது கூறியதாவது:-

நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது.  நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு பற்றி அமைச்சர் சி.வி.சண்முகம் தவறான தகவல் அளித்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து  சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியதாவது:-

நீட் விவகாரத்தில் நான் எந்த தவறான தகவலும் கூறவில்லை.  நான் ராஜினாமா செய்யத் தயார், எதிர்கட்சி தலைவர் ராஜினாமா செய்யத் தயாரா? என்றார்.

நீட் மசோதா விவகாரத்தில் அமைச்சர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. நீட் தேர்வு தொடர்பான பேரவை விவாதங்களின் போது பதில் அளிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

நீட் தேர்வு மசோதா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசும் போது, 

நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் . நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானங்கள் குறித்து குடியரசு தலைவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என  கூறினார்.

நீட் தேர்வு மசோதா குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசையும் அணுகுகிறோம், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கிறோம்.  நீட் தேர்வு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது நளினி சிதம்பரம் தான். இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்