ரூ.64 கோடி மதிப்பில் 'அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்' -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Update: 2019-07-09 09:59 GMT
சென்னை

மீன்வளத்துறை, விளையாட்டுத்துறை, கால்நடைத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதலமைச்சர்  வெளியிட்டுள்ளார்

பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார் அதன் விவரம் வருமாறு:-

* நடப்பு ஆண்டில், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் "அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்"  செயல்படுத்தப்படும்.

* விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் கழிவேலியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மீன்பிடித் துறைமுகங்கள் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறைக்கப்படும்.

*  100 விசைப் படகுகள் மற்றும் 500 கண்ணாடி நாரிழைப் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக 150 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய மீன்பிடி துறைமுகம் ஆற்காட்டுத்துறையில் அமைக்கப்படும்.

* நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகூர் மீன்பிடி இறங்குதளம் அமைந்துள்ள வெட்டார் ஆற்றின் வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

* தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்திலுள்ள பெரியதாழையில், அலை தடுப்புச்சுவர் கருங்கற்கள் மற்றும் கான்கிரீட் கற்களாலும் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

* உலகத் தரத்துடன் சிறந்த ஆய்வக முறைகளுடன் கூடிய ஒரு புதிய "மத்திய கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம்" காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்