தமிழக மக்களின் வரி பணத்தில் வாங்கிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை; கனிமொழி எம்.பி. கண்டனம்
தமிழக மக்களின் வரி பணத்தில் வாங்கிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,001 கோடி ரூபாய் செலவில் 3,381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 4ந்தேதி 500 புதிய பேருந்துகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பேருந்தில் அவசர வழி என்று குறிப்பிடும் பகுதியில் தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. எம்.பி கனிமொழி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என தெரிவித்து உள்ளார்.
தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.#stopHindiImpositionpic.twitter.com/SqAQfEJI6N
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 7, 2019