எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் : திருவள்ளூரை சேர்ந்த மாணவி சுருதி முதல் இடம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருவள்ளூரை சேர்ந்த மாணவி சுருதி முதல் இடம் பிடித்தார்.

Update: 2019-07-06 23:23 GMT
சென்னை, 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க கடந்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை முறையாக வெளியிட, அதை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் டைரக்டர் விமலா, ‘டீன்’ நாராயணபாபு உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 57 ஆயிரத்து 804 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 31 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் தகுதியுடையவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் மாணவர்கள் 11 ஆயிரத்து 741 பேரும், மாணவிகள் 19 ஆயிரத்து 612 பேரும் அடங்குவார்கள். விண்ணப்பித்தவர்களில் 17 ஆயிரத்து 618 பேர் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரத்து 651 விண்ணப்பங்கள் தகுதியுடையவைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் மாணவர்கள் 9 ஆயிரத்து 366 பேரும், மாணவிகள் 16 ஆயிரத்து 285 பேரும் அடங்குவர். விண்ணப்பித்தவர்களில் 14 ஆயிரத்து 387 பேர் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், கலந்தாய்வு 8-ந் தேதி (நாளை) தொடங்குகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அதன் பின்னர், 9-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் அட்டவணையை மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக்குழு நேற்று இரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 9-ந் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் ‘நீட்’ தேர்வில் 685 மதிப்பெண்கள் முதல் 517 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. ‘நீட்’ தேர்வில் 516 மதிப்பெண்கள் முதல் 464 மதிப்பெண்கள் வரை எடுத்த பொதுப்பிரிவினருக்கு 10-ந் தேதியும், 463 மதிப்பெண்கள் முதல் 422 மதிப்பெண்கள் வரை எடுத்த பொதுப்பிரிவினருக்கு 11-ந் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதேபோல 421 மதிப்பெண்கள் முதல் 399 மதிப்பெண்கள் வரை எடுத்த பொதுப்பிரிவினருக்கு 12-ந் தேதி காலையிலும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பிற்பகலிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது. 13-ந் தேதி காலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பிற்பகல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. www.tnmedicalselection.org, www.tnhealth.org ஆகிய இணையதளங்களில் இருந்து அழைப்பு கடிதங்களை பதிவிறக்கம் செய்துவிட்டு, கவுன்சிலிங்களில் பங்கேற்கவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பவர்கள் (இதர பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) செயல்பாட்டு கட்டணம் மற்றும் கல்வி கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 110 செலுத்தவேண்டும். இதேபோல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ.10 ஆயிரத்து 110 செலுத்தவேண்டும். பி.டி.எஸ். படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பவர்கள் (இதர பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) ரூ.12 ஆயிரத்து 110-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ.10 ஆயிரத்து 110-ம் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியலில் அரசு ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:- (நீட் மதிப்பெண் அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டு உள்ளது.)

1) கே.சுருதி (நீட் மதிப்பெண்-685) - திருவள்ளூர், 2) ஏ.கே.அஸ்வின் ராஜ் (677) - அந்தியூர், 3) வி.இளமதி (676) - கோவை, 4) ஜி.சிவ மோனிஷ்குமார் (670) - திருநெல்வேலி, 5) ஏ.அன்புவாணன் (670) - சென்னை, 6) ஏ.ஸ்ரீகாந்த் (667) - சென்னை, 7) ஏ.தான்யா (665) - கோவை, 8) பி.பிரியங்கா ரெட்டி (660) - சென்னை, 9) என்.சக்திமீனாள் (659) - கோவை, 10) ஷாலினி ஜெயராமன் (655) - பெங்களூரு.

நிர்வாக ஒதுக்கீட்டில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

1) சோதம் ஸ்ரீநந்தன் ரெட்டி (நீட் மதிப்பெண்-685) - கடப்பா, 2) பி.மகேஷ் ஆனந்த் (685) - பெங்களூரு, 3) பகதூர் சிங் (685) - பெங்களூரு, 4) அகர்வால் திஷா சமிர் (685) - அகோலா, மராட்டியம். 5) கொல்ல ஹர்ஷித் சவுத்ரி (685) - நெல்லூர். 

மேலும் செய்திகள்