பா.ஜ.க. தொண்டர்களின் கட்சி, ஒரு குடும்பத்துக்கு சொந்தமானதல்ல ; மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேச்சு

பா.ஜ.க. தொண்டர்களின் கட்சி, ஒரு குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல என்றும், நாங்கள் சாதாரண தொண்டர்களாக இருந்து தலைவர்களாக உயர்ந்து உள்ளோம் என்றும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசினார்.

Update: 2019-07-06 22:55 GMT
சென்னை, 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பா.ஜனதா சார்பில் ‘எல்லா இடத்திலும் பா.ஜனதா; எல்லோர் இடத்திலும் பா.ஜனதா’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கை பிரசார வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் 8980808080 என்ற எண்ணை அழுத்தி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன், ஆடிட்டர் என்.சி.பிரபாகர், காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் வி.எஸ்.வீரமணி, நடிகர் பாபு கணேஷ் உள்பட ஏராளமானோர் கட்சியில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில செயலாளர்கள் கருநாகராஜன், அனு சந்திரமவுலி, மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியபோது, “பா.ஜனதா 11 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே பெரிய கட்சியாக விளங்குகிறது. பா.ஜனதாவில் சாதாரண தொண்டர்கள் கூட தலைவர்கள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது இல்லை. தமிழகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் உதிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கூட அவர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா பின்னடைவை சந்தித்தது. இந்த பின்னடைவை பின்னுக்கு தள்ளி உறுப்பினர் சேர்க்கையின் மூலம் வரும் காலத்தில் தமிழகத்தில் பாஜனதாவை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-

பா.ஜனதா தொண்டர்களின் கட்சி. ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கட்சி அல்ல. அமித்ஷா, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், நான் (ரவிசங்கர் பிரசாத்) உள்பட அனைவரும் சாதாரண தொண்டர்களாக இருந்து இந்த அளவிற்கு தலைவர்களாக உயர்ந்துள்ளோம். பிற கட்சியினருக்கு அவரவர் குடும்பத்தினரே பிரதானம். பா.ஜனதாவில் 75 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்கள் பங்கெடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றி பெற்று தந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே போலீசாரை ஏவி அடக்குமுறையை கையாளுகிறார் மம்தா பானர்ஜி. ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை கோஷம். அதனை அடக்க முடியாது. விரைவில் கேரளாவில் பா.ஜனதா வெற்றிபெற போகிறது. தமிழகத்திலும் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியது போன்று தாமரை மலர்ந்தே தீரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்