10 சதவீத இடஒதுக்கீடு; நாளை மறுநாள் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
10 சதவீத இடஒதுக்கீடு பற்றி நாளை மறுநாள் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
நீட் தேர்வு முடிவு கடந்த ஜூன் 5ந்தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்பு இடங்களுக்கு மொத்தம் 68 ஆயிரத்து 20 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதை சரிபார்த்து மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு இன்று காலை வெளியானது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.
இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி இதுபற்றி முடிவு செய்யப்படும். இதற்காக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடப்படும் என கூறியுள்ளார்.