நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக தி.மு.க.வின் குரல் ஒலிக்கிறது திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மக்கள் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் தி.மு.க.வின் குரல் ஒலிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
சென்னை,
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேத்தியும், வடசென்னை தி.மு.க. எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமியின் மகளுமான டாக்டர் மாளவிகா - டாக்டர் சி.விஷ்ணுபிரசாந்த் ஆகியோருக்கு சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருமண விழாவுக்கு தலைமை தாங்கி பேசியதாவது:-
இங்கு துரைமுருகன் காலதாமதமாக வந்ததினால் அவர் வரவேற்புரை ஆற்ற முடியாத நிலையில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பினை பெற்றார். இப்படித் தான் சட்டமன்றத்திற்கும் அடிக்கடி தாமதமாக வருவார். ஜீரோ ஹவர் நெருங்குகின்ற நேரத்தில் தான் வந்து அமர்வார். அப்படி வந்தாலும் ஏதேனும் பிரச்சினைகளை கிளப்பி அதனை பதிவு செய்யக்கூடிய வகையில் ஆற்றல் கொண்டவர்.
என்ன செய்யப்போகிறார்கள்?
கலாநிதி வீராசாமி இன்றைக்கு நாடாளுமன்றத்தில் அவரும் ஒரு உறுப்பினராக இருந்து தமிழர்களின் குரலையும், அந்தத் தொகுதி மக்களின் குரலையும், தி.மு.க.வின் குரலையும் அங்கு ஒலிக்கச் செய்துகொண்டிருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியின் சார்பில் 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லுகின்ற நேரத்தில், 38 உறுப்பினர்கள் சென்று என்ன செய்யப்போகின்றார்கள். மத்தியிலும் ஆட்சி இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிலும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அங்கு சென்று என்ன கிழிக்கப்போகிறார்கள் என்றார்கள். சென்ற அன்றைக்கே தமிழ்நாட்டின் குரலை எழுப்பிவிட்டார்கள்.
தி.மு.க.வின் குரல்
காவிரி பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை போன்ற பல பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அ.தி.மு.க.வின் சார்பில் முன்பு 37 எம்.பி.க்கள் இருந்தார்கள். என்றைக்காவது நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை எழுப்பி பேசி இருக்கிறார்கள் என்ற செய்தியை கடந்த 5 வருடமாக நாம் பார்த்ததுண்டா? என்றால் இல்லை.
ஆனால் பொறுப்பேற்ற உடனே, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் குரல் இன்றைக்கு ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றது என்று சொன்னால், அதுதான் கருணாநிதி உருவாக்கி இருக்கின்ற இயக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.