‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களுக்கு தடை: தமிழக அரசு துணிச்சலான நடவடிக்கை டாக்டர் ராமதாஸ் பாராட்டு

‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களுக்கு தடை விதித்திருப்பது தமிழக அரசின் துணிச்சலான நடவடிக்கை என்று டாக்டர் ராமதாஸ் பாராட்டி உள்ளார்.

Update: 2019-07-04 19:55 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று தமிழக சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்திருக்கிறார். காவிரி பாசன மாவட்டங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உருவெடுத்து வரும் நிலையில், தமிழக அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது ஆகும்.

தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் தமிழக அரசின் அனுமதியை பெறாமல் இத்தகையத் திட்டங்களை செயல்படுத்த முடியாது. இத்திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், அதற்கு இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இனியும் அனுமதி அளிக்காது” என்று உறுதிபட தெரிவித்தார். இது உழவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க. அனுமதி

காவிரி பாசன மாவட்டங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு மண்டலமாக மாற்றும் முயற்சிகளுக்கு நுழைவாயில் அமைத்துக் கொடுத்தது தி.மு.க. அரசு தான். தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் துரப்பண பணிகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 28.8.1989 அன்று அனுமதி அளித்தது தி.மு.க. அரசு தான். அதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் ஆய்வுக்கு அனுமதி அளித்ததும் அப்போதைய தி.மு.க. அரசு தான். மேற்கண்ட இரு நடவடிக்கைகளால் ‘ஹைட்ரோ கார்பன்’ பூதம் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் அளவுக்கு விசுவரூபம் எடுத்திருக்கிறது.

வேளாண் மண்டலம்

தமிழக அரசின் அனுமதியின்றி இவற்றில் ஒரு திட்டத்தைக்கூட செயல்படுத்த முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தவிர பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் உள்ளிட்ட சில திட்டங்களையும் காவிரி பாசன மாவட்டங்களில் திணிக்க தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்திலிருந்தும் காவிரி பாசன மாவட்டங்களைக் காக்க, கூடுதல் பாதுகாப்பு கவசமாக, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்