நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை : சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தகவல்

நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2019-07-03 23:34 GMT
சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கூட்டுறவுத்துறை, உணவுத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் டி.செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி தொகுதி) பேசினார்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

செங்குட்டுவன்:- தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் விவசாய கடன் அதிக அளவு தள்ளுபடி செய்யப்பட்டது.

அமைச்சர் செல்லூர் ராஜூ:- தி.மு.க. ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சொன்னீர்கள். ஆனால், ரூ.5,369 கோடி தான் தள்ளுபடி செய்தீர்கள். அதிலும், ரூ.506 கோடி கடனை கொடுக்காமலேயே போய்விட்டீர்கள்.

செங்குட்டுவன்:- ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் இருப்பதாக அதிகாரிகள் தான் சொன்னார்கள். நாங்கள் ரூ.5,785 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்தோம். 2001-2006-ம் ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.4,613 கோடி விவசாய கடன் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டு, வெறும் ரூ.508 கோடி தான் தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் 199 கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டன. பிறகு, தி.மு.க. ஆட்சியில் தான் அவை திறக்கப்பட்டன.

அமைச்சர் செல்லூர் ராஜூ:- கூட்டுறவு சங்கங்கள் ஏன் நஷ்டம் அடைந்தது?. கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. தி.மு.க. ஆட்சியில் தகுதியில்லாதவர்களை பணிக்கு நியமனம் செய்துள்ளர்கள்.

(இந்த நேரத்தில் உறுப்பினர் செங்குட்டுவன் எழுந்து ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்தார். உடனே சபாநாயகர், ஆதாரத்துடன் பேச வேண்டும் என்று கூறி, அவர் குறிப்பிட்டதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார். அந்த நேரத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேசினார்)

துரைமுருகன்:- எங்கள் (தி.மு.க.) ஆட்சியை அமைச்சர் குறை சொல்கிறார். அதற்கு அவரிடம் என்ன ஆதாரம் உள்ளது.

சபாநாயகர் :- அமைச்சரே பொறுப்பேற்றுத்தான் பேசுகிறார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- உங்கள் ஆட்சியில் நடந்த தவறுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்லட்டுமா?. காஞ்சீபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.100 கோடி முறைகேடு நடந்தது. தவறு செய்தவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இப்போது சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது.

துரைமுருகன்:- எல்லா வழக்குகளையும் சி.பி.ஐ. தான் விசாரணை செய்கிறது. குட்கா வழக்கை கூட சி.பி.ஐ. தான் விசாரிக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் ரூ.100 கோடி முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- குட்கா வழக்கு விசாரணைகூட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நடக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- இப்போது சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று கூறியதும் நீதிபதி தான்.

மு.க.ஸ்டாலின்:- இப்போது சி.பி.ஐ. விசாரணை நடக்கிறதா?, இல்லையா?.

செங்குட்டுவன்:- நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று 2001-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா போராட்டம் நடத்தினார். இன்று வரை ஓய்வூதிய பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் காமராஜ்:- நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாள் இருந்து வருகிறது. அரசும் பரிசீலனை செய்கிறது. அதில் 10 பிரிவுகள் இருக்கின்றன. ஒரு பிரிவில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்தால், மீதமுள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். நுகர்பொருள் வாணிபக் கழகம் லாப நோக்கத்தோடு நடத்தப்படவில்லை. எனவே, இது அரசின் ஆய்வில் உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

மேலும் செய்திகள்