தான் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அமைச்சர் ஜெயக்குமார்

தான் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பாடம் நடத்தினார்.

Update: 2019-07-03 23:14 GMT
திருவொற்றியூர், 

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 450 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார்.

மேலும் கணினி சம்பந்தமான 10-க்கும் மேற்பட்ட கேள்விகளை மாணவ-மாணவிகளிடம் எழுப்பிய அவர், அதற்கு சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் பரிசளித்தார்.

தான் படித்த பள்ளி என்பதால் அமைச்சர் ஜெயக்குமார் தரையில் விழுந்து வணங்கினார். மேலும் வகுப்பறைக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு பாடமும் நடத்தினார்.

அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு நேரம் இருப்பதால் தலைமை கழகம் முடிவை பொறுமையாக அறிவிக்கும்.

உள்ளாட்சி தேர்தல் நடக்கக்கூடாது என நினைத்ததே தி.மு.க.தான். நீதிமன்றத்தின் முடிவை பொறுத்து, தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும். முதல்-அமைச்சர் கூறியதுபோல் மக்கள் விரும்பிய திட்டத்திற்கு மட்டுமே அரசு துணை நிற்கும். மக்கள் விரும்பாத திட்டத்தை அரசு ஒருபோதும் ஏற்காது.

பயம் உள்ளவர்கள் பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க தனியாக செல்லும்போது தானாக கத்திக்கொண்டே செல்வார்கள். அதுபோல்தான் தற்போது டி.டி.வி.தினகரன் கத்திக்கொண்டு இருக்கிறார்.

தனிமரம் எப்போதும் தோப்பு ஆகாது. தமிழகத்தில் எடுபடாத கட்சி என்றால், அது அ.ம.மு.க.தான். தினகரன் ஒரு தனி கருவேல மரம். அது எதற்குமே உதவாது. சசிகலா, தினகரன் தவிர அக்கட்சியில் இருந்து யார் வந்தாலும் அ.தி.மு.க வரவேற்கும்.

அனைத்து கட்சி கூட்டம் எப்போது தொடங்கும் என்பதை தலைமை கழகம் முடிவு செய்து அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்