போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடக்கூடாது : தமிழக அரசு அறிவிப்பு
போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட வர்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் 11-12-2018 நாளிட்ட ஆணைப்படி, போக்சோ சட்டத்தில் பாதிக்கப்படும் நபர்களின் அடையாளத்தையோ மற்றும் பெயரையோ வெளிப்படுத்தக் கூடாது என ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் அவர்களின் இதர விவரங்களை எந்த ஒரு நபரும் அச்சு, மின்னணுவியல் மற்றும் சமூக ஊடகங்கள் முதலியவற்றில் தெரியப்படுத்தவும் மற்றும் பாதிக்கப்பட்டவருடைய அடையாளத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும் கூடாது.
* பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தையோ மற்றும் பெயரையோ அவர்கள் உறவினர்கள் அங்கீகரித்தால் கூட பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தையோ மற்றும் பெயரையோ வெளியிடக்கூடாது.
* முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனை சட்டப்படி குற்றச்சாட்டுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்கள் தொடர்பான விவரங்களை பொது இடங்களில் வெளியிடக்கூடாது.
* பாதிக்கப்பட்ட ஒரு வழக்கில் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 372-ன் கீழ் ஒருவர் மேல்முறையீடு செய்தால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தையோ மற்றும் பெயரையோ வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
* காவல் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் முடிந்தவரை முத்திரை செய்யப்பட்ட வில்லையில் மறைமுகமாக பாதுகாக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களை பொது இடத்தில் ஆராய்ந்து பார்க்கக்கூடாது.
* வழக்கு புலனாய்வு நிறுவனம் அல்லது நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் பெயரை ரகசியமாகவும் மேலும் வழக்கு சம்பந்தப்பட்ட அறிக்கையைத் தவிர வேறு எதையும் வெளியிடக்கூடாது.
* போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள சிறார்களின் அடையாளத்தை சிறப்பு நீதிமன்றத்தால் மட்டுமே வெளியிட அனுமதிக்கலாம். அத்தகைய வெளிப்படுத்துதல் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.