அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கட்டணம் ரத்து : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து பேசிய அந்தத் துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-
தமிழ்நாட்டிலுள்ள 120 கல்வி மாவட்டங்களில் ஏற்கனவே 32 மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, மீதமுள்ள 88 கல்வி மாவட்டங்களிலும் தலா ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும்.
தமிழகத்தில், சிறைச்சாலைகளிலுள்ள சிறைவாசிகளுக்கு அரசுத் தேர்வுகள், சிறைச்சாலை வளாகத்திலேயே நடத்தப்படுவதுபோல, சிறைச்சாலைகளிலுள்ள முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்க, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டுள்ள 1 லட்சத்து 68 ஆயிரத்து 716 படிப்பறிவு இல்லாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்தும் வகையிலும், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வரும் தகவலை பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் மாணவர்களின் வருகை குறித்த தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் புதுமைத் திட்டமாக 44 பள்ளிகளில் ‘அடல் டிங்கரிங்’ ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 223 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அறிவியல் உபகரணங்கள், உணர்விகள், மின்னணுவியல் கருவிகள், முப்பரிமாண அச்சுப்பொறிகள், தானியங்கி கருவிகள், கணினிகள் மற்றும் நுண்கட்டுப்பாட்டு பலகைகள் வழங்கப்படும்.
இணையப் பாதுகாப்பு, பாலினப் பாகுபாடு, மனஅழுத்தம் மற்றும் உணர்ச்சிகளைக் கையாளும் திறன் போன்ற கருப்பொருள்களில் மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்குடன், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் என்ற புதுமையான திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 2 லட்சத்து 34 ஆயிரத்து 691 ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும்.
2,381 அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்பருவக் கல்வி சார்ந்த சிறப்புப் பயிற்சி அளித்தல் மற்றும் குழந்தை மைய கற்றலுக்கான சூழல் உருவாக்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மனநலம் பேணுகின்ற வழிமுறைகள் கற்றுத்தரப்படும் வகையில் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பாடத்திட்டத்தோடு திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் மேலும் 53 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும். மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பட்டயக்கணக்காளர் படிப்பிற்கான வழிகாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
100 அரசுப் பள்ளிகள் மற்றும் 44 மாணவியர் விடுதிகளுக்கு சூரிய ஒளிமின் வசதி ஏற்படுத்தப்படும். 10 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கான சிறப்பு செயல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இரண்டு புதிய உண்டு உறைவிடப் பள்ளிகளை தொடங்குதல் பின்தங்கியுள்ள சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தாலுகா வள்ளியூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மலையப்பநகர் ஆகிய இரண்டு புதிய உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்கப்படும்.
சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நூலகங்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு வாசகர்கள் பயன்பாடு அதிகமுள்ள, இலவசமாகக் காலிமனை பெறப்பட்டுள்ள 2 நூலகங்கள் தெரிவு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் அமைத்துத்தரப்படும்.
சேலம் மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு நூலகம் அமைக்கப்படும். அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் செவி மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான சிறப்புப் பிரிவு தொடங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நாட்குறிப்பேடுகள் வழங்கப்படும். பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.