தமிழக சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக் புள்ளி விவரம் தவறானது-அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக்கில் தவறாக தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
சென்னை
தமிழகம் சுகாதாரத்துறையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும், வீடுகளில் பிரசவம் நடைபெறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசின் நிதி ஆயோக்கில் குறிப்பிட்டுள்ளதாக கூறி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தின் சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக்கில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் 99 சதவீத பிரசவம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் தான் நடைபெறுகிறது எனவும், நிதி ஆயோக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான பதிவுகள் தொடர்பாக மத்திய அரசிற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிறப்பான மருத்துவ சேவைகள் அளிப்பதால் தான் ஆந்திராவில் இருந்து 30 சதவிகிதம் பேர் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதாக விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் காட்பாடி தாலுகா பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க அரசு பரிசீலனை செய்யுமா என்று கேள்வியை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூடிய விரைவில் அரசாணை வந்து சேரும் என்று பதிலளித்தார்.