சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தி நவீன வசதிகளுடன் கடல் ஆமை பாதுகாப்பு மையம் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
சென்னை,
கடல் வாழ் உயிரினங்களான ஆலிவ்ரிட்லிஸ் மற்றும் கடல் பசு ஆகியவை எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. இதனால் கடல் ஆமை மற்றும் கடல் பசுக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை வனச்சரணாலயம் அருகே முப்பரிமாண அருங்காட்சியகத்துடன் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தி நவீன வசதிகளுடன் கூடிய கடல் ஆமை பாதுகாப்பு மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.
யானைகள் மனித வாழ்விடங்களுக்குள் புகுவதை கண்காணிக்க தொலைதூரக் கட்டுப்பாட்டு தெர்மல் கேமரா, கண்காணிப்பு படப்பிடிப்பு கருவி, கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முன்னெச்சரிக்கை அமைப்பு கோவை வனக்கோட்டத்தில் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகம் மற்றும் தமிழ்நாடு வனவியல் பயிற்சிக்கல்லூரி ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப்படும். வனத்துறையில் அரிதான மரங்கள் திருடப்படுவதை தடுக்கும்வகையில், மரக்கிடங்கு மற்றும் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வண்டலூர் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் சர்வதேச தரத்திலான குளிர்சாதன வசதியுடன் கூடிய 25 அறைகள் கொண்ட பசுமைக் கட்டிட விடுதி கட்டப்படும்.
காஞ்சீபுரம் மாவட்டம் தண்டரை மற்றும் புல்லேரி மூலிகை பண்ணை தோட்டங்களில் மூன்று ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மூன்றாண்டுகளில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.