ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்திய விவகாரம்: அறநிலையத்துறை இணை ஆணையர் பணியிட மாற்றம்

ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்திய விவகாரம் தொடர்பாக வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2019-06-07 05:45 GMT
சென்னை,

அறநிலைய துறையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக மேல்மருவத்தூர் கோவிலில் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை தடுத்த ஊழியர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலை பங்காரு அடிகளார், அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். கோவிலில் நடக்கும் தைப்பூசத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்த கோவில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்ளது.

இந்த கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். இதற்காக காஞ்சீபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டது. அதிகாரிகள் குழுவினர் மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு செய்ய சென்றனர். அவர்கள் அறநிலையத்துறையின் உத்தரவு நகலை கோவில் ஊழியர்களிடம் காண்பித்து ஆய்வு செய்ய முயன்றனர்.

இதற்கு கோவிலில் இருந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் கோவிலில் இருந்து வெளியேறினர்.

இதுபற்றி உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில், வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின் பேரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை ஆய்வு செய்ய சென்றோம். அப்போது கோவிலில் இருந்த ஊழியர்கள் எங்களை பணிசெய்ய விடாமல் தடுத்தனர். மேற்படி கோவிலில் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் பணி செய்யவிடாமல் இடையூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்

 இந்த நிலையில்   ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்திய விவகாரம் தொடர்பாக  வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அறநிலையத்துறையின் அனுமதியில்லாமல் மேல்மருவத்தூரில் ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வு நடத்திய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்