தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல்?
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், டி.ரத்னவேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது.
திமுக உறுப்பினர் கனிமொழியின் பதவிக்காலமும் அதே தேதியில் முடிவடைய இருந்த நிலையில், அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆகவே அடுத்த மாதம் 24-ம் தேதிக்குள் 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக தேர்தல் நடத்த உயர்மட்ட ஆலோசனைகள் நடந்து இருப்பதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவிலேயே தேர்தல் தேதி குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தகவல்வெளியாகியுள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.