அரசு மருத்துவமனை கட்டிடத்தில் ‘திடீர்’ விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு டாக்டர்கள்-நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
மன்னார்குடி அரசு மருத்துவமனை கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் டாக்டர்களும், நோயாளிகளும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருவாரூர்,
மன்னார்குடி அரசு மருத்துவமனை கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் டாக்டர்களும், நோயாளிகளும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மருத்துவமனை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத் துவமனையில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் அனுமதி சீட்டு வழங்கும் மையம், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அலுவலகம், மருந்தகம் ஆகியவை இயங்கி வந்தன. நேற்று காலை 10 மணி அளவில் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தனர். சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அந்த கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அங்கு சுவரில் பதிக்கப்பட்டு இருந்த டைல்ஸ் கற்கள் பெயர்ந்து விழுந்தன. ஜன்னல் கம்பிகள் வளைந்தன. இதன் காரணமாக பலத்த சத்தம் கேட்டதால் அங்கிருந்த டாக்டர்களும், நோயாளிகளும் அலறியடித்துக்கொண்டு மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதுபற்றி தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு படை வீரர்கள் மருத்துவ மனைக்கு விரைந்து சென்று கட்டிடத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கட்டிடத்துக்குள் ஆட்கள் யாரும் நுழையாதபடி கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசலை மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேறு கட்டிடத்துக்கு மாற்றம்
விரிசல் ஏற்பட்டு உள்ள கட்டிடத்தில் இயங்கி வந்த அனைத்து பிரிவுகளும் வேறு கட்டிடத்துக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் விரிசல் ஏற்பட்டதாகவும், கட்டிடத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.