கடலில் கரைத்த பெருங்காயம் ஆனது, அ.ம.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

கடலில் கரைத்த பெருங் காயம் போல பரிதாப நிலையில் அ.ம.மு.க. இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2019-06-05 22:45 GMT
சென்னை, 

சென்னையில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.ம.மு.க. கட்சி இல்லை

அ.ம.மு.க. ஒரு கட்சியே இல்லை, வெறும் குழு தான். ஒரு லெட்டர் பேடு கட்சி. கழுதை தேய்ந்து கட்டெறும்பாய், அந்த கட்டெறும்பு ஒரு சிற்றெறும்பாய், அந்த சிற்றெறும்பு இன்று காணாமல் போயிருக்கிறது. கடலில் கரைத்த பெருங்காயம் போல அ.ம.மு.க.வின் நிலை பரிதாபமாக உள்ளது.

எனவே தான் கடந்த சில நாட்களாக நம்மிடம் பிரிந்து அ.ம.மு.க.வுக்கு சென்ற நமது சகோதரர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வர தொடங்கி உள்ளனர். இன்னும் நிறைய பேர் வர இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும்

‘ஸ்லீப்பர் செல்ஸ்’, என்று டி.டி.வி.தினகரன் வாய் கிழிய பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ‘நமது இயக்கத்தில் தான் ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ இருக்கிறார் கள். இங்கிருந்து வேறு இயக்கத்துக்கு செல்கிறவர்கள் செல்லலாம்’ என்று டி.டி.வி.தினகரன் பேசியிருக்கிறார். இதிலிருந்து அ.ம.மு.க.வை வழிநடத்த டி.டி.வி.தினகரன் தயாராக இல்லை என்பதைத்தான் இந்த பேச்சு காட்டுகிறது.

தி.மு.க. எந்தவகையிலும் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எண்ணம். அந்த எண்ணத்தை ஈடு செய்யும் வகையில் உண்மையான விசுவாசிகள் அ.தி.மு.க.வுக்கு திரும்பவேண்டும்.

7 தமிழர்கள் விடுதலை

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. அரசியலமைப்பு சட்டப்படி எந்த ஒரு சட்டமும் கவர்னரின் மூலமே பிறப்பிக்கப்படவேண்டும். 7 பேர் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதில் மாநில அரசுக்கு உடன்பாடு உண்டு. இதுகுறித்து தனி தீர்மானமே ஜெயலலிதாவால் இயற்றப்பட்டது. அதற்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறோம். கவர்னர் இதனை நிராகரிக்கவில்லை. எனவே அனுமானங்களுக்கு பதில் சொல்வது கடினம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்