தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
சென்னை,
கோவையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை கோவையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து இதமான தட்ப வெப்பநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொண்டையம்பட்டி :
மதுரை மாவட்டம் அலங்காநல்லுரை அடுத்த கொண்டையம்பட்டி பகுதியில் இடியுடன் கனமழை பெய்தது. இதில் ஐயப்பன் என்ற கட்டட தொழிலாளி இடிதாக்கி உயிரிழந்தார். வீடு கட்டும் பணியில் அவர் ஈடுபட்டிருந்த போது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராசிபுரம் :
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் , பட்டணம், நாமகிரிபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் குளிர்ந்த காற்று வீசி வெப்பம் தணிந்தது.கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இராஜபாளையம் :
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வெயில் சுட்டெரித்த போதே இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இது போல் தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனை தீரும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.