மும்மொழி குறித்த டுவிட்டர் பதிவை முதல்வர் பழனிச்சாமி நீக்கினார்

மும்மொழி குறித்த டுவிட்டர் பதிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.

Update: 2019-06-05 11:18 GMT
புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு கடந்த 31-ந் தேதி தனது வரைவு அறிக்கையை மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் தாக்கல் செய்தது.

இந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை 6-ம் வகுப்பில் இருந்து தொடங்கவேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநில மொழியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூறினார்கள்.

அதேசமயம், தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி அளித்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, புதிய கல்வி கொள்கை அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது.

திருத்தப்பட்ட புதிய வரைவு அறிக்கையின்படி, தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது, இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாவது மொழி பாடத்தை மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். 

இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேர்க்க நடவடிக்கை தேவை என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.  இதனால் உலகின் மிக தொன்மையான மொழிக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டு இருந்தார். இது முதல்வர் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளிக்கிறார் என்ற விமர்சனத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில் மும்மொழி குறித்த டுவிட்டர் பதிவை முதல்வர் பழனிச்சாமி நீக்கியுள்ளார். 

மேலும் செய்திகள்