தனியார் ஆஸ்பத்திரி பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி கிட்னி வாங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி

ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி கிட்னி வாங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-06-04 21:45 GMT
ஈரோடு,

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் பெயரில் முகநூலில் (பேஸ்புக்) போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. அந்த கணக்கில், முன்பதிவு செய்து தேவைப்படும்போது கிட்னி கொடுத்தால் ரூ.3 கோடி தருவதாக விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி சிலர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு முன்பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட தொகை வசூலித்து மோசடி செய்யப்பட்டு உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு முகநூல் கணக்கு தொடர்பாக கேட்டறிந்தார். அப்போது முகநூலில் கணக்கு தொடங்கப்படவில்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மோசடி

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கில் சென்று பார்த்தபோது, தங்களது ஆஸ்பத்திரியின் பெயரிலேயே போலி கணக்கு தொடங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன்மூலம் பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரியின் டாக்டர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் கொடுத்தனர். அவருடைய உத்தரவின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்