போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு

போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

Update: 2019-06-04 11:35 GMT
திருச்சி:

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில் ‘லைப் அண்ட் கேர் சென்டர்’ என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த மையத்தில் சுமார் 25 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த போலீஸ் ஏட்டு தமிழ்ச்செல்வன் (வயது 35) என்பவரும் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். போதை பழக்கத்திற்கு அடிமையான அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

போதை பழக்கத்தை மறந்து மீண்டும் பணியில் சேர முடிவு செய்த அவர், நண்பர்கள் மூலம் திருச்சி கே.கே.நகரில் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அவர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு மையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மாத்திரை கொடுத்தபோது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் திருச்சி பிரபல ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும், ஆனால் தமிழ்ச்செல்வன் சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் நேற்று முன் தினம் திருச்சி வந்து உடலை பெற்றுச்சென்றதுடன், சொந்த ஊருக்கு கொண்டு சென்று உடலை அடக்கம் செய்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்து உறவினர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

நேற்று திருச்சி போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்த உறவினர்கள், தமிழ்ச்செல்வனின் உடைமைகளை எடுத்துச்செல்வதாக கூறியுள்ளனர். அப்போது அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தமிழ்ச்செல்வன் அடித்துக் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அதனால்தான் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.

உடனே இது குறித்து திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் செய்தனர். அதில், தமிழ்ச்செல்வனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் அடித்து கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் உடனே விசாரணையை தொடங்கினர்.

அந்த மையத்திற்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக உள்ள சிலர் சங்கிலியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். அங்கு சங்கிலிகள், கயிறுகள் இருந்ததை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து மையத்தை சேர்ந்தவர்கள், தங்கியிருந்த நோயாளிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்ச்செல்வனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஆவணங்கள், வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகள் ஆகியவற்றின் விபரத்தையும் திரட்டினர். தொடர்ந்து தமிழ்ச்செல்வன் மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மையத்தில் உள்ளவர்கள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு இன்றும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்ச்செல்வன் மரணத்தின் மர்மத்தை கண்டுபிடிக்க புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள சொந்த ஊரான கண்டமங்கலத்தில்தான் தமிழ்ச்செல்வன் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்கிறார்கள்.

அதன்பிறகே தமிழ்ச்செல்வன் சாவிற்கான உண்மையான காரணம் தெரியவரும். இதற்கிடையே போதை மறுவாழ்வு மையத்தை டாக்டர் நிரஞ்சனா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்த மருத்துவ சேவை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மையத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக மருத்துவக்குழுவினர் அதிரடியாக ஆய்வை தொடங்கி உள்ளனர். 

சென்னை மனநல இயக்குனரகம் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் நிரஞ்சனா தலைமையில் இருவர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர் நிரஞ்சனா, பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. 

மேலும் செய்திகள்