பாரதியாருக்கு காவி தலைப்பாகை! 12-ம் வகுப்பு பாட புத்தக அட்டை படத்தால் சர்ச்சை
12-ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தின் அட்டைதான் சர்ச்சையாகியுள்ளது. அதில் பாரதியார் படம் வரையப்பட்டுள்ளது. அந்தப் படத்தால்தான் சர்ச்சையே கிளம்பியுள்ளது.
சென்னை
தமிழக அரசு பள்ளி பாடப் புத்தகங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய புத்தகங்களை நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விக்கழக தலைவர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தின் அட்டையின் இடது ஓரம் ஒரு நடனப் பெண்மணியின் படம் உள்ளது. வலது புறம் இன்னொரு நடனக்காரர். நடுவில் பாரதியார். முகம் தெரியாமல் தலைப்பாகையுடன் பாரதி காணப்படுகிறார். அவரது அடையாளமான முறுக்கு மீசை தெளிவாக தெரிகிறது.
வழக்கமாக பாரதியாரின் தலைப்பாகை வெள்ளையில்தான் இருக்கும். நீண்ட வெண் துணியால்தான் அவர் தலைப்பாகை அணிவார். ஆனால் இதில் ஆரஞ்சு அல்லது காவி கலரில் தலைப்பாகை உள்ளது. இதுதான் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பாரதியாரின் தலைப்பாகை ஏன் காவியாக உள்ளது. இது பாஜகவின் திட்டமிட்ட திணிப்பா என்று சிலர் கிளம்பியுள்ளனர். இன்னும் சிலரோ இல்லை இல்லை படத்தை நன்றாகப் பாருங்கள்.. தேசியக் கொடியின் மூவண்ணம் தெரியும் என்கிறார்கள்.
ஆனாலும் பாரதியாரின் அடையாளத்தை மறைத்து ஏன் காவி நிறம். இதைத் தவிர்த்திருக்கலாமே என்று சூடான வாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏன் இந்த நிறத் திணிப்பு என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
இதுதொடர்பாக தி.மு.க.வின் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா? பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது.
மாணவர்கள் மத்தியில் பாரதியாரை பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது என்று கூறினார்.
இருப்பினும் பாடப் புத்தகத் தயாரிப்புப் பணிகளில் தொடர்புடைய ஆசிரியர்கள் கூறுவது என்னவென்றால் இதில் யாருடைய தலையீடும் இருக்க வாய்ப்பில்லை. படம் வரைந்த ஓவியர்தான் இதுபோல வரைந்திருப்பார். அவர் தேசிய கொடியின் மூவண்ணத்தை நினைத்து வரைந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.