முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே இன்னும் தண்டிக்கப்படவில்லை தொல்.திருமாவளவன் வேதனை

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

Update: 2019-05-18 21:45 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழ மண்ணில் ‘யுத்தம் முடிந்தது; விடுதலைப்புலிகள் அழிந்தனர்’ என்று ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறி கும்பல் கொக்கரித்த முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஈழத்தமிழர் வாழ்வில் இன்னும் வெளிச்ச கீற்று வெளிப்படவில்லை. இனக்கொலை மற்றும் போர்க்குற்றம் இழைத்த ராஜபக்சே கும்பல் இன்னும் விசாரிக்கப்படவும், தண்டிக்கப்படவும் இல்லை.

தமிழினத்தின் கலாசாரம் அல்லது பண்பாடு மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழலிலும், அதன்பின்னரும் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன தமிழர்களின் நிலை என்ன என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளோ, ஐ.நா. பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகமோ பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு உரிய நீதி கிடைக்க எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை.

இந்தியாவில் ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும் ஒரே நிலைப்பாடு மற்றும் ஒரே அணுகுமுறைதான் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் சர்வதேச அரசியல் சூழலுக்கேற்ப ஒருங்கிணைந்து செயல்படவும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவை வென்றெடுத்து மண்ணை மீட்கவும், மக்களைக் காக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்