சென்னை விமான நிலையத்தில் ரூ.12½ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Update: 2019-05-14 19:00 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னைக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த வசந்தஜெயராஜ் (வயது 25) என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் தலைமுடியை உலர வைக்கும் கருவி (ஹேர் டிரையர்) மற்றும் ஒலிபெருக்கி பெட்டி (ஸ்பீக்கர்) ஆகியவை இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 232 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த பாத்திமா பாதுல் (43) என்பவர் வந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 154 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். பிடிபட்ட இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்