மு.க.ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கத்துக்குட்டி அரசியல்வாதிகள்
தேர்தல் பிரசாரம் செய்யும்போது நாகரிகமாக, அமைதியாக, வரம்புக்கு உட்பட்டுதான் ஓட்டு கேட்போம். கமல்ஹாசன் செய்வதுபோல் வரம்பு மீறி பிரிவினைவாதிபோல் பேசமாட்டோம். இதைத்தான் அனுபவம் என்பது. பிரிவினை கருத்துகளால் மக்கள் மனது புண்படுகிறது என்று தெரிந்தே ஓட்டு அரசியலுக்காக கமல்ஹாசன் போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதிகள் எல்லாம் இவ்வாறு பேசுகின்றனர்.
கமல்ஹாசனுக்கு வீரமணி ஆதரவு கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அழகிரியின் பேட்டி, காங்கிரஸ் தலைவர் போல் இல்லாமல் பிரிவினைவாதியின் பேட்டிபோல் இருந்தது. அழகிரியின் பேட்டியை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது தெரியவேண்டும். ஐ.எஸ். இயக்கத்தைப்போல் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பயங்கரவாத இயக்கம் என்று கூறுகிறார்.
குழம்பி போய் உள்ளார்
இலங்கை தமிழர்கள், சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ் கட்சிதான் பயங்கரவாத இயக்கம். மு.க.ஸ்டாலினை, சந்திரசேகர ராவ் சந்திப்பதால் குழம்பி போய் அழகிரி பேசியுள்ளார். மீனாட்சி அம்மனை சந்திப்பதுபோல் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்திப்பதாக அழகிரி கூறுகிறார்.
இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இதை கண்டு தோல்வி பயத்தில் அனைவரும் பேசுகின்றனர். இந்து பயங்கரவாதம் என்று கமல்ஹாசன் சொல்கின்றார். இந்தியாவில் இருந்து சென்ற 10 பேர் உள்பட பலர் இலங்கையில் கொல்லப்பட்டனர். அப்போது பயங்கரவாதம் பற்றி வாயே திறக்கவில்லை. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது என்று கூறுகின்றனர்.
கோட்சேவின் செயலை யாரும் ஏற்கவில்லை. தூக்கில் போட்டவரை எதற்காக தூக்கி சுமக்கின்றனர்? என தெரியவில்லை. ஓட்டு வங்கி அரசியலுக்காக செயல்படுகின்றனர். கமல்ஹாசன் பேசுவது மக்களுக்குத்தான் புரியவில்லை என்று நினைத்தேன். ஆனால் அவரது கட்சியினருக்கே புரியவில்லை.
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது
மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் சந்திப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் ராகுல் காந்தியை பிரதமர் என்று சொன்ன மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவை சந்திக்கிறாரே? என்று காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது.
3-வது அணி எல்லாம் கிடையாது. முதன் முதலில் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தவர் மு.க.ஸ்டாலின்தான் என்று அழகிரி பேசுகிறார். 3-வது அணி அமைப்பதால் எங்களுக்கு கவலையில்லை.
பா.ஜ.க. வலிமையாக இருப்பதால்தான் இதுபோன்ற சந்திப்புகள் நடக்கிறது. மோடி இன்னும் வலிமை பெறுகிறார். மோடி உறுதியாக இருக்கிறார் என்பதை இந்த சந்திப்புகள் காட்டுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.