“சத்தியமூர்த்தி பவனில் கக்கன் சிலை விரைவில் நிறுவப்படும்” தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி
“சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் கக்கன் சிலை விரைவில் நிறுவப்படும்” என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் அரசு குடியிருப்பில் உள்ள தியாகி கக்கன் வீட்டுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம் உள்பட நிர்வாகிகளும் சென்றனர்.
அங்கு கக்கனின் மகன் சத்தியநாதன், மனைவி மகேஷ்வரி, சகோதரி கஸ்தூரிபாய், உறவினர்கள் பி.வி.தமிழ்செல்வன், இமயா ஆகியோரை கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு
தியாகி கக்கன் குடும்பத்தாரையும், மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுவையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அரசின் விதிமுறைகளை சுட்டிக்காட்டி வெளியேற்ற முடிவு செய்திருக்கிறார்கள். மாற்று குடியிருப்பு ஏற்படுத்திவிட்டு, இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனாலும் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்லக்கண்ணுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘உங்களுக்கும், கக்கன் குடும்பத்தாருக்கும் மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்து தரப்படும்’ என்று சொல்லியிருக்கிறார்.
இந்த உறுதிமொழி வரவேற்க மற்றும் பாராட்டத்தக்கது. இதற்காக அவருக்கும், அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். இன்னும் 24 மணி நேரத்தில் நல்லக்கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு இலவச வீடுகள் ஒதுக்கீடு செய்துதர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
சத்தியமூர்த்தி பவனில் சிலை
தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் நான் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காமராஜர், சத்தியமூர்த்திக்கு சிலை வைத்திருக்கிறோம். விரைவில் தியாகி கக்கனுக்கும் சிலை திறக்க உள்ளோம். இதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன். கக்கன் குடும்பத்துக்கு உதவ என்றென்றும் காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.