“தாய்வீடான சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன” தமாகா தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-10 10:31 GMT
சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை பாஜகவில் சேருவது என தவறான முடிவெடுத்தால் அந்த முடிவை காங்கிரஸ் உணர்வுள்ள இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.

எதை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ, அதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியும். பா.ஜ.க.வில் இணைவது என்ற முடிவு அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகும். நெடுங்காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரசில் உள்ள அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு அழைக்கிறேன். 

இளம் தலைவர் ராகுல்காந்தியின் போர்ப்படையில் இணைய உடனடியாக வாருங்கள். உங்கள் தாய்வீடான சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன. இதில் நுழைவதற்கு உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம். உங்களை ஆதரிக்க, அரவணைக்க தலைமை தயாராக இருக்கிறது. இனியும் அங்கே நீடிப்பதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை எனக்கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், 

"பாஜகவுடன் தமாகா இணைவது குறித்து வெளியான தகவல் முற்றிலும் தவறானது. டெல்லிக்கு மாதம் ஒரு முறை தான் போய் வருகிறேன். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறேன், இந்த மாதிரியான செய்தியை நம்பி காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை விடுவது வருத்தம் அளிப்பதாக" அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் உருவபொம்மையை தமாகாவினர் ஓமலூரில் எரித்தனர். தமாகா பற்றி அவதூறு தகவல் வெளியிட்டதாக கூறி அக்கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்