கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்றது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி. இவர்களது மகள் திலகவதி (வயது 19). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்த தேர்வை எழுதிவிட்டு, திலகவதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பெற்றோர் இல்லை. அவர் மட்டும் தனியாக இருந்தார். இதையறிந்த வாலிபர் ஒருவர், வீட்டிற்குள் புகுந்து, திடீரென கத்தியால் திலகவதியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர், அதே கிராமத்தை சேர்ந்த மாமா மகேந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
உடனே அவர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து, திலகவதியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திலகவதி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகவதியை குத்திக்கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
மேலும் திலவதியின் செல்போனை கைப்பற்றி, அதில் அவருக்கு வந்த அழைப்புகள் பற்றி பார்த்தனர். அதில் பேரளையூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ்(வயது 19) என்பவரின் செல்போனில் இருந்து அதிகளவு அழைப்புகள் வந்துள்ளது தெரியவந்தது. எனவே அவர்தான், திலகவதியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவரை பிடிப்பதற்காக போலீசார் பேரளையூருக்கு சென்றனர். ஆனால் அங்கு ஆகாஷ் இல்லை.
இதனிடையே ஆகாஷ், வெளியூர் செல்வதற்காக விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று ஆகாசை பிடித்து, விசாரித்தனர். விசாரணையில், திலகவதியை கொலை செய்ததை ஆகாஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
வாக்குமூலம்
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எனக்கும், திலகவதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தற்போது நான் கூலிவேலை செய்து வருகிறேன். திலகவதி கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தோம். கடந்த சில நாட்களாக திகலவதி, என்னுடன் செல்போனில் பேசவில்லை.
எனவே அவரிடம் பேசுவதற்காக பல முறை முயன்றேன். ஆனால் முடியவில்லை. இதனிடையே கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து நானும் வந்தேன். அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லை. எனவே வீட்டிற்குள் புகுந்து, திலகவதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்தசமயத்தில் எனக்கும், திலகவதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலகவதியின் வயிற்றில் குத்தினேன். உடனே அவர் கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து, வீட்டிற்கு சென்று விட்டேன். வெளியூர் செல்வதற்காக பஸ்சிற்காக காத்திருந்தபோது, என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.