மதுரையில் நள்ளிரவில் பயங்கர விபத்து: பெண் போலீஸ் உள்பட 4 பேர் பலி
மதுரையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் பெண் போலீஸ் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மதுரை,
நெல்லையில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் நள்ளிரவு 12.30 மணி அளவில் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் மதுரை அங்கயற்கண்ணி தெருவைச் சேர்ந்த ஜோதி (வயது 30) தனது உறவினர் சத்தியவாணி (40) மற்றும் சத்தியவாணியின் மகள் சூர்யகலா(13) ஆகியோருடன் வந்து கொண்டிருந்தனர்.
அதேபோல் மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் திருச்சியைச் சேர்ந்த ஆனந்தன் (28) என்பவர் தனது நண்பர் விக்னேசுடன் (35) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் சாலையில் வந்தபோது, ஆம்னி பஸ் திடீரென நிலை தடுமாறி இவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் 5 பேரும் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதினர்.
சம்பவ இடத்தில் பலி
இந்த விபத்தில் ஜோதி, சத்தியவாணி, ஆனந்தன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். சிறுமி சூர்யகலாவும், விக்னேசும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
விபத்தில் இறந்துபோன சத்தியவாணி விருதுநகர் நகராட்சி அலுவலகத்திலும், ஜோதி தல்லாகுளம் போக்குவரத்து போலீஸ் பிரிவிலும் பணியாற்றி வந்தனர்.
4 ஆக உயர்ந்தது
இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சூர்யகலா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னேசுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி, பஸ் டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த தர்மராஜ்(30) என்பவரை கைது செய்தனர்.