அரவக்குறிச்சி தொகுதியில் 2-வது நாளாக பிரசாரம்: விவசாயிகளிடம் குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெற்றிலை விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

Update: 2019-05-08 23:15 GMT
நொய்யல்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு, நேற்று முன்தினம் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சைக்காளக்குறிச்சி, குப்பம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். பின்னர் இரவில் கரூரில் கோவை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்வதற்காக காலை 7 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு பிரசார வேனில், புகளூர் பாலத்துறை சேலம் பைபாஸ் ரோடு பகுதிக்கு சென்றார். அங்கு வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஒரு மரத்தடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார். இதையடுத்து அவரிடம் விவசாயிகள் பேசுகையில், இந்த பகுதிகளில் வெற்றிலை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் வாடல்நோய் உள்ளிட்டவை தாக்குவதால் சாகுபடி பாதிக்கப்படுகிறது. இதனால் விற்பனை சரிவை சந்திக்கிறது. எனவே வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், தி.மு.க. ஆட்சி அமையும் போது பயிர்க்கடன் தள்ளுபடி உள்பட விவசாயிகளின் பிரதான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வீதிகளில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு காவிரி ஆறு அருகே குடியிருக்கும் மக்கள், தங்களது வீட்டை காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீசு கொடுத்துள்ளதாகவும், எனவே தங்களது வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டும். காவிரி ஆற்றின் ஓரமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடாத வகையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். தவுட்டுபாளையத்தில் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ஸ்டாலினிடம் தெரிவித்தனர். அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார். அப்போது பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஸ்டாலின் அந்த குழந்தையை கையில் தூக்கி கொஞ்சினார். பின்னர் அந்த குழந்தைக்கு ‘கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். அப்போது அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டலுக்கு புறப்பட்டு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் க.பரமத்தி ஒன்றியம் பவுத்திரம் ஊராட்சி ஜெயந்தி நகர் காலனிக்கு காலை 10.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள திடலில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பொதுமக்கள் வழங்கிய டீயை குடித்தார். இதையடுத்து பொதுமக்கள், எங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தெருவிளக்கு, கழிவறை வசதி, சாலை வசதி, சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது தங்கள் பகுதிக்கு கலங்கலாக வரும் குடிநீரை மு.க.ஸ்டாலினிடம் மக்கள் காண்பித்தனர். அதனை குடித்து பார்த்த மு.க.ஸ்டாலின், உப்புத்தன்மை அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். அப்போது, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள தெருக்களில் வீதி வீதியாக மு.க.ஸ்டாலின் நடந்து சென்று மக்களிடையே தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பலரும் அவருடன் கைக்குலுக்கி ஆதரவு தெரிவித்து செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர், பிரசார வேனில் ஓட்டலுக்கு வந்து ஓய்வெடுத்தார்.

மேலும் செய்திகள்