டி.டி.வி.தினகரன் கட்சியில் நாங்கள் உறுப்பினர் இல்லை: சபாநாயகர் நடவடிக்கை எங்களை கட்டுப்படுத்தாது அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி பேட்டி

டி.டி.வி.தினகரன் கட்சியில் நாங்கள் உறுப்பினராக இல்லை என்றும், சபாநாயகரின் நடவடிக்கை எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி கூறினார்.

Update: 2019-05-03 22:00 GMT
சென்னை,

அ.தி.மு.க.வை சேர்ந்த அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி, அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஆனால் சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடைகோரி ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் மீது சில குறைகளை கூறி சபாநாயகரிடம் கடந்த 26-ந் தேதி கொறடா ராஜேந்திரன் ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் சபாநாயகர் எங்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். எங்கள் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து அதற்கான பதிலை விரைவில் அளிக்க இருக்கிறோம்.

இதற்கிடையே சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகர் மீது வரும்போது, அதில் அவர் வெற்றி பெறுவதற்கு முன்னால் எந்த எம்.எல்.ஏ. மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது.

அதை சுட்டிக்காட்டி நாங்கள் வழக்கு தொடுத்திருக்கிறோம். கோர்ட்டும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. வரும் 6-ந் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சேர்ந்து சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தோம். பின்னர், அவரை திடீரென நீக்க வேண்டும் என்றார்கள். அவரை நீக்கக்கூடாது, எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னோம். இதில், பிரச்சினை வந்ததால் தனி அணியாக செயல்பட்டோம்.

நீதிமன்றமும் தனி அணியாக செயல்படலாம் என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. தனியாக பெயர் வைத்துக்கொள்ளலாம், கொடி வைத்துக்கொள்ளலாம், தனியாக போட்டி போடலாம் என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். தனி அணியாக செயல்படலாம் என்று சொன்னார்கள். ஆனால், தனி அணியாக இருக்கின்ற வரை நாங்கள் அதிலே இருந்தோம். ஆனால், இன்றைக்கு அதில் இருந்து பிரிந்திருக்கிறோம்.

கடந்த மாதம் 19-ந் தேதி டி.டி.வி.தினகரன் கட்சியை பதிவு செய்ததற்கு பின்னாலே, அந்த கட்சியில் நாங்கள் சேரவில்லை. அந்தக் கட்சி கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. அந்தக் கட்சியில் நாங்கள் உறுப்பினரும் இல்லை. எனவே சபாநாயகர் கேட்டிருக்கின்ற விளக்கம் எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.

நாங்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இந்தக் கட்சிக்கு வந்தவர்கள். ஜெயலலிதாவின் அடிச்சுவட்டை பின்பற்றி வருகிறோம். எங்களை வேட்பாளராக அறிவித்து, வெற்றி பெற வைத்ததும் ஜெயலலிதா தான். அதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. எனவே, இந்த இயக்கத்தின் நலனை எங்களைவிட பெரிதாக கருதுபவர்கள் யாரும் கிடையாது.

இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு இன்றைக்கு துணை முதல்- அமைச்சர், ஒருங்கிணைப்பாளர் என்று பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று பாடுபட்ட எங்களுக்கு தகுதியிழப்பு நோட்டீசை பரிசாக வழங்கியிருக்கிறார்கள். கூடிய விரைவில் நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்