மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக்கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அதில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் இருந்த 10,347 ஆக்கிரமிப்புகளில் 4,161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அடையாறு நதி ரூ.6.18 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளது. அடையாறு நதிக்கரை ரூ.50 லட்சம் செலவில் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று 56 பணிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஏரிகளில், ஆக்கிரமிப்பை அகற்ற அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை பாதுகாக்க ரூ.100 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சிறப்புக்குழு
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
இந்த பணிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணைகள் கட்ட வேண்டும்
நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால், நமது முன்னோர் ஆறு, குளம், ஏரிகளில் பார்த்த தண்ணீரை, எதிர்கால சந்ததியினர் பாட்டிலில் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படக்கூடும். மக்கள் வரிப்பணத்தை இலவசங்கள் வழங்க பயன்படுத்துவதை விடுத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் அணைகள் கட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
இயற்கையின் வரப்பிரசாதமான நீரை வீணாக்கினால், தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேப்டவுன் நகருக்கு ஏற்பட்டதை போல தமிழகத்திலும் தண்ணீர் இல்லா நாள் வரப்போவது வெகு தூரத்தில் இல்லை. ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை அடையாளம் காண சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.