திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கும்பகோணம், தஞ்சை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் திருவிடைமருதூர் நகர பா.ம.க. முன்னாள் செயலாளர் ஆவார்.
கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ராமலிங்கம், ஒரு கும்பலை சேர்ந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து உள்ளனர்.
இந்த நிலையில் ராமலிங்கம் படுகொலை தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து ராமலிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் கடந்த மாதம்(ஏப்ரல்) 25-ந் தேதி ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுகத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று திருபுவனம் வந்து தங்களுடைய முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கும்பகோணம், தஞ்சை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதானவர்கள், தேடப்படுபவர்கள் மற்றும் 4 இடங்களிலுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்டாப்கள், 2 லட்சம் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.