தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்துக்கொன்றது
தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்துக்கொன்றது.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் மான், கரடி, குரங்குகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வசித்து வருகின்றன. தற்போது அந்த வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மரம், செடி-கொடிகள் கருகி காணப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளிலும் தண்ணீர் இல்லை.
இதனால் வனவிலங்குகள் அனைத்தும் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. அதன்படி நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீரை தேடி வெளியேறியது. இந்த மான் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதிக்குள் புகுந்தது.
அப்போது அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள், மானை கண்டதும் விரட்டின. பின்னர் சுற்றிவளைத்து கடித்தன. இதனை கவனித்த பொதுமக்கள் நாய்களை விரட்டிவிட்டு, மானை மீட்டனர். எனினும் நாய்கள் கடித்ததில் மான் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த கிடந்த மானின் உடலை பார்வையிட்டனர்.
மேலும் சென்னம்பட்டி கால்நடை மருத்துவர் அங்கு வந்து, இறந்து கிடந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இறந்தது 2½ வயதுடைய ஆண் புள்ளிமான் ஆகும்’ என்றார். இதைத்தொடர்ந்து மானின் உடல் அந்த பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.