அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் 4 மணி நேரம் விசாரணை எம்.எல்.ஏ. விடுதி அறையில் காலி பைகள், துண்டு சீட்டுகள் குறித்து விளக்கம்
எம்.எல்.ஏ. விடுதி அறையில் கிடந்த காலி பைகள் மற்றும் துண்டு சீட்டுகள் குறித்து வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆஜராகி 4 மணி நேரம் விளக்கம் அளித்தார்.
சென்னை,
எம்.எல்.ஏ. விடுதி அறையில் கிடந்த காலி பைகள் மற்றும் துண்டு சீட்டுகள் குறித்து வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆஜராகி 4 மணி நேரம் விளக்கம் அளித்தார்.
சோதனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில், கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் போலீசார் துணையுடன், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா ஆகியோரது அறைகளில் சோதனை நடந்தது. அப்போது பணம் மற்றும் பரிசு பொருட்கள் போன்றவை எதுவும் கிடைக்கவில்லை. எனினும் காலி பைகளும், துண்டு சீட்டுகளும் சிதறி கிடந்தன.
அமைச்சர் ஆஜர்
இது தொடர்பாக அங்குள்ள அதிகாரிகள், அறை உதவியாளர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் கூறிய பதில்கள் அதிகாரிகளுக்கு திருப்திகரமாக இல்லை.
இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நேற்று காலை 11.10 மணிக்கு வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் ஆஜரானார்.
‘ஒரு கருத்தும் இல்லை’
அப்போது அவருடைய அறையில் கிடந்த காலி பைகள் மற்றும் துண்டு சீட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உரிய விளக்கம் கூறிவிட்டு சென்றார். இந்த விசாரணை பகல் 2.50 மணிக்கு முடிந்தது.
சுமார் 4 மணி நேர விசாரணை முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டபோது, ‘ஒரு கருத்தும் இல்லை’ என்று கூறிவிட்டு அவர் சென்றார்.
பணப்பட்டுவாடா புகார்
இதுகுறித்து வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கணக்கில் வராத பண நடமாட்டத்தை கண்காணிக்க வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையில் ஒரு வருமான வரித்துறை அதிகாரி தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அனைத்து ரகசிய தகவல்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை. நம்பத்தகுந்த தகவல்கள், பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களும் வருகின்றன. தேர்தல் நேரம் என்பதால் தற்போது பணப்பட்டுவாடாவில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.
சோதனை தொடரும்
இதுதொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவரும் ஆஜராகி விளக்கம் அளித்தார். இது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். தேர்தல் முடியும் வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். பணப்பட்டுவாடா சோதனையும் தொடரும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.