பஸ்சில் சென்ற அ.தி.மு.க. நிர்வாகி உறவினரிடம் ரூ.31 லட்சம் பறிமுதல்
விளாத்திகுளம் அருகே பஸ்சில் சென்ற அ.தி.மு.க. நிர்வாகியின் உறவினரிடம் இருந்து ரூ.31 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி,
விளாத்திகுளத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சை வழிமறித்து தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஸ்சில் இருந்த பயணிகளின் உடைமைகளையும் அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த, விளாத்திகுளத்தை சேர்ந்த ராமராஜ் என்பவரின் துணிப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
ராமராஜிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ராமராஜை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அ.தி.மு.க. நிர்வாகி உறவினர்
கைப்பற்றப்பட்ட துணிப்பையில் ரூ.31 லட்சத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பணம் கைப்பற்றப்பட்டதால், அதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரியிடம் ஒப்படைக்குமாறு தாசில்தார் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.31 லட்சத்தை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக ராமராஜிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமராஜ், அ.தி.மு.க. புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமியின் உறவினர் ஆவார். எனவே விளாத்திகுளம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு பணத்தை கொண்டு சென்றனரா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் ரூ.26 லட்சம் பறிமுதல்
திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க. நிர்வாகியான இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தி, ரூ.26 லட்சம் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.23½ லட்சம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நேமூர் பஸ் நிறுத்தத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி, அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பஸ்சில் இருந்த யாரும் அந்த பைக்கு உரிமை கோராததால் அதில் இருந்த 23 லட்சத்து 50 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக யாரேனும் எடுத்து வந்தபோது, அதிகாரிகளை பார்த்தவுடன் போட்டு சென்றுவிட்டனரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.