எதிர்க்கட்சிகளைத்தான் தேர்தல் ஆணையம் குறி வைக்கிறது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
ஆளும் கட்சியை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளைத்தான் தேர்தல் ஆணையம் குறி வைத்து செயல்படுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:–
துணிவு இல்லாதவர்
மேகதாது அணையில் ராகுல்காந்தி நிலை என்ன? என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்டத்திற்கு மோடி அரசு ஒப்புதல் தந்துள்ளது. மோடியிடம் தான் இதுகுறித்து அவர் கேள்வி கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க துணிவு இல்லாத முதல்–அமைச்சர் எங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்.
நதிநீர் இணைப்பு பிரச்சினை ஆங்கிலேயர் காலத்திலேயே உள்ள பிரச்சினையாகும். பல ஆண்டுகளாக பெற்று வரும் காவிரி நீரை பெறவே சிரமப்படுகிறபோது புதிதாக நதிகளை இணைப்போம் என்று மோடி கூறுவது பொய்யான வாக்குறுதி.
எதிர்க்கட்சிகள் மீது குறி
தேர்தல் ஆணையம், பறக்கும் படைகள் சரியாக செயல்படுவதில்லை. கடந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் பண பட்டுவாடாவை தடுக்காமல் தோல்வியடைந்து உள்ளது. எதிர்க்கட்சிகளைத்தான் குறிவைக்கிறார்கள். பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களிடம் சோதனை செய்வதில்லை. ஆளும்கட்சிகளிடம்தான் பணம் உள்ளது. இது எப்படி தேர்தல் ஆணையம் கண்களுக்கு தெரியாமல் போனது.
25 ஆண்டுகளாக நிறைய தமிழர்கள் சிறையில் உள்ளனர். அவர்கள் மீது காட்டாத அக்கறையை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் மீது காட்டுவதில் உள்அர்த்தம் இருக்கிறது. தண்டனை கொடுப்பதையும், விடுதலை செய்வதையும் கோர்ட்டு தான் முடிவு செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் உளவாளி
மோடி வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இம்ரான்கான் சொல்லி உள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இம்ரான்கான் சொல்லியிருந்தால் காங்கிரசை பாகிஸ்தான் உளவாளி என்று பா.ஜ.க.வினர் கூறியிருப்பார்கள்.
பாகிஸ்தான்–மோடி இடையே ரகசிய உறவு இருக்கிறது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகின்றனர். நாட்டில் அமைதி உருவாக்கப்படும் என்ற நாடகத்தை நடத்துவதும் பா.ஜ.க. தான்.
இவ்வாறு அவர் கூறினார்.