தமிழ் புத்தாண்டு இன்று பிறப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

தமிழ் புத்தாண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2019-04-13 23:15 GMT
சென்னை, 

தமிழ் புத்தாண்டு வாழ்த்து 

உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இன்று சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:–

எடப்பாடி பழனிசாமி 


முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:–

தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் 


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி:–

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும், எங்கள் அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும், இனிமையும் தமிழர் தம் இல்லந்தோறும் தங்கிப் பொங்கட்டும் என்று, மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என மீண்டும் ஒருமுறை எங்களது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.

டாக்டர் ராமதாஸ் 


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–

தமிழ் கொண்டாட்டங்களின் தொடக்கமாக அமையும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உணவு படைக்கும் கடவுளான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும். அதற்காக சரியான முடிவை எடுக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

வைகோ 


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:–

இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம் தான் சித்திரை முதல் நாள் ஆகும். தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்துக்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரை திங்கள் மலர்கின்றது. தமிழ் மண்ணுக்குப் புதுப்பொலிவு கூட்டிட கடமை ஆற்றுவோம். களத்தில் வெற்றியும் காண்போம். தரணி எங்கணும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கே.எஸ்.அழகிரி 


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:–

தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிற தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாசாரம், பாரம்பரிய பெருமை இவற்றை எல்லாம் பறிக்கிற அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை தமிழர்கள் அனைவரும் மனதில் கொண்டு, மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிற அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தமிழ் புத்தாண்டில் சூளுரை மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் 


தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:–

தமிழ் மக்களுக்கும், இந்தியாவில் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும், அனைத்து மக்களுக்கும் இதயம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மத்தியில் நடைபெறுகின்ற நல்லாட்சி தொடரவும், மாநிலத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற ஆட்சி மேலும் சிறக்கவும், புதிய வாழ்க்கையும், புதிய பொலிவும், புதிய தொடக்கமும் இனிய தமிழ் புத்தாண்டில் மலர வேண்டும். தமிழ் சமுதாயம் வாழ்வு வளம்பெற வளமான தமிழகம் வலிமையான பாரதம் உருவாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

டி.டி.வி.தினகரன் 


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:–

தமிழகத்திலும் உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற எம் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். நம்முடைய மொழியை, கலாசாரத்தை, பண்பாட்டை, உரிமைகளை எல்லாவற்றுக்கும் மேலாக அடிமைப்பட்டு கிடக்கிற நம்முடைய தமிழ்நாட்டை அதன் மாண்புகளோடு மீட்டெடுக்கப் போகிற புத்தாண்டாக விகாரி ஆண்டு அமையட்டும். புதுப்புது வெற்றிகளை குவித்து, தமிழகமும், தமிழர்களும் தலை நிமிர்கிற நல்லாண்டாக மலரட்டும். நெஞ்சம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அன்புமணி 

இதேபோல், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்