நடிகர் ஜே.கே.ரித்திஷ் மறைவுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்
அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலர், நடிகர் ஜே.கே.ரித்திஷ் மறைவுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
திமுக முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்திஷ்(46) மாரடைப்பால் உயிரிழந்தார். ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
2009-ல் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரித்திஷ். கானல்நீர், நாயகன், பெண்சிங்கம் மற்றும் கடைசியாக எல்.கே.ஜி படத்தில் நடித்துள்ளார்.
ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலர், நடிகர் ஜே.கே.ரித்திஷ் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ரித்திஷ் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தோம். ஜே.கே. ரித்திஷ்-யை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.