தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18–ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

Update: 2019-04-10 19:03 GMT
சென்னை, 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18–ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த தேர்தல்களின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட சில வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியில் இருந்து மே 19–ந் தேதி மாலை 6.30 மணி வரை, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது போன்றவை தடை செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு இடைப்பட்ட 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்