21-ம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது - கோவையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
21-ம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது என கோவையில் பிரதமர் மோடி பேசினார்.
கோவை,
மருதமலை முருகனுக்கு அரோகரா.... வணக்கம் சகோதர சகோதரிகளே தமிழக மக்களுக்கு வணக்கம் என தமிழில் பேசி பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.
பிரதமர் மோடி பேசியதாவது:-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் எண்ணங்கள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். கல்வி,தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன்.
பிரதமர் மோடி ஏன் தேசியத்தை பற்றி பேசுகிறார் என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். தேசிய தன்மை தான் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, மருத்துவ காப்பீடு திட்டத்தை கொடுக்க வைத்தது. தேசியவாதியாக இருப்பது குற்றமா?.. இந்த தேசியவாதம் தான் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியது.
1998-ல் கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது திமுகவும், காங்கிரசும் மோசமாக செயல்பட்டன. எதிரி நாடு மீது எதிர்க்கட்சிகள் மென்மையாக நடந்து கொள்கிறது. பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. தேசியவாதிகளாக இருந்தோம், தேசியவாதிகளாக இருக்கிறோம். தேசியவாதிகளாகவே இருப்போம். எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள் நாட்டை காக்க உதவாது.
துல்லிய தாக்குதல் நடந்ததா? விமானப்படை தாக்குதல் நடத்தியதா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். ராணுவம், விமானப்படை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சந்தேகித்து வருகின்றன.
தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். நம் நாடு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும். தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை.
பாதுகாப்பு தளவாட மையங்கள் தமிழகத்தில் அமையும் போது வேலை வாய்ப்பு, முதலீடு அதிகரிக்கும். பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமாக இருக்கப் போகிறது. 21-ம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது.
மக்களுக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டிற்கு எதிராக இருப்பதற்கு அதனை தயாரித்த தலைவரே சாட்சி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.
ஜாமீன் பெற வேண்டும் என்பதே மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சராக இருந்தவரின் நோக்கம். அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நடுத்தர மக்களை பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடவில்லை. காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வாக்களித்தால் மக்கள் மீதான வரி அதிகரிக்கும். நடுத்தர மக்களை வஞ்சிப்பது காங்கிரசுக்கு ஒன்றும் புதிதல்ல. காங்கிரசின் தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
நீரை முழுமையாக பயன்படுத்த ஒரு சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்படும். நதிகளை தூய்மைப்படுத்தவும், இணைக்கவும் முன்னுரிமை அளித்து செயல்படுகிறோம். மழைநீர் சேகரிப்புக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
10 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியது, ஆனால் 5 ஆண்டுகளில் பாஜக அரசு 1.5 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாட்டுக்காக பாஜக கூட்டணி உழைத்து வருகிறது.
நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. தேசத்தின் பாதுகாப்புக்கு பாஜக கூட்டணி முன்னுரிமை அளித்து வருகிறது. பாதுகாப்பான தேசத்தை கட்டமைப்பதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.