‘ஜல்லிக்கட்டு தடை விலக காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி’ தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது என்றும், அந்த தடை விலக காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி என்றும் ராஜபாளையத்தில் பிரசாரம் செய்த ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2019-04-07 22:30 GMT
ராஜபாளையம்,

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராஜ பாளையம், சங்கரன்கோவில் முக்கு பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கிய தொழிலாக உள்ள நெசவு தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் கிருஷ்ணசாமி செயல்படுவார். வரும் தேர்தலில் வாக்காளர்களான நீங்கள்தான் எஜமானர்கள். ஒரு நல்ல தீர்ப்பை தாருங்கள்.

கடந்த 2011-ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதா ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து மக்களுக்கு அர்ப்பணித்தார். பல்வேறு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஆட்சியை யாராலும் குறை சொல்ல முடியாது.

தி.மு.க.வினர் டீ குடித்தால் காசு கொடுக்கமாட்டார்கள். பரோட்டா சாப்பிட்டால் பணம் தரமாட்டார்கள். பிரியாணி சாப்பிட்டால் உரிமையாளரை தாக்குவார்கள். இது தி.மு.க.வின் பண்பாடு. தனி நபர் சொத்துக்களை அதிகாரத்தை காட்டி மிரட்டி பறித்தனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை எல்லாம் மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

நான் முதல்- அமைச்சராக இருந்தபோது பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்ததன் பலனாக அந்த தடை உடனடியாக விலக்கப்பட்டது. அந்த தடை விலகுவதற்கு மூல காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி தான். அதேபோல 1,500 கோடி ரூபாய் மதிப்பில் உலக தரத்திலான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உருவாகி கொண்டிருக்கிறது. இதுபோன்ற நலத்திட்டங்கள் தமிழகத்துக்கு அதிக அளவில் வருவதற்கு நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

மேலும் செய்திகள்