தேனி, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம் தமிழகத்தில் 9, 12, 13-ந் தேதிகளில் மோடி, ராகுல் போட்டி பிரசாரம்

தமிழகத்தில் பிரதமர் மோடி வருகிற 9 மற்றும் 13-ந் தேதிகளில் பிரசாரம் செய்கிறார். ராகுல் காந்தி 12-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.

Update: 2019-04-07 00:15 GMT
சென்னை,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளு மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன் காலியாக இருக் கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தீவிர பிரசாரம்

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களும் தங்கள் முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்து இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி

மாநில தலைவர்கள் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பிரசாரம் செய்கிறார்கள்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி கடந்த மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் மார்ச் 6-ந் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தமிழகத்தில் போட்டி போட்டு பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி தமிழகத்தில் மீண்டும் வருகிற 9 மற்றும் 13-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

9-ந் தேதி வருகிறார்

9-ந் தேதி இரவு 7.45 மணி அளவில் கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து மோடி பேசுகிறார்.

13-ந் தேதி துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இதற்காக தேனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் க.விலக்கு என்ற இடத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு ரவீந்திரநாத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேசுகிறார்.

ராகுல்காந்தி

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13-ந் தேதி கன்னியாகுமரியில் பிரசாரம் செய்தார்.

அவர் மீண்டும் வருகிற 12-ந் தேதி தமிழகம் வர உள்ளார். அன்றைய தினம் சேலம், தேனி மற்றும் மதுரையில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

தேனியில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் அன்னஞ்சி விலக்கு என்ற இடத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பேசுகிறார். இதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் விறுவிறு அடைந்து உள்ளது.

மேலும் செய்திகள்