முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் உறவினர் வீட்டில் ரூ.25 லட்சம் பறிமுதல் வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கை
பாலக்கோடு அருகே முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளருமான பழனியப்பனின் உறவினர் பொல்லியப்பன் வீடு தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள எக்காண்டஅள்ளியில் உள்ளது. ஓய்வு பெற்ற துணை தாசில்தாரான இவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சென்றனர்.
ரூ.25 லட்சம் பறிமுதல்
இதையடுத்து அதிகாரிகள் வீட்டை உள்பக்கமாக சாத்திவிட்டு திடீரென சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியில் இருந்து காலை 5 மணி வரை நடந்த இந்த சோதனையில் பொல்லியப்பன் வீட்டில் ரூ.25 லட்சம் சிக்கியது. இந்த பணம் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது, பொல்லியப்பன் கூறும்போது, தான் ஓய்வு பெற்றதன் மூலம் கிடைத்த பணம் என்றும், தனது மகன்கள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய வகையில் சம்பளம் வாங்கி கொடுத்த பணம் என்றும் கூறினார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் ரூ.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் கூறினர்.
உறவினர் வீடுகளில் சோதனை
இதேபோல, வருமான வரித்துறையினர் பெரிய கும்மனூரில் உள்ள பொல்லியப்பனின் உறவினரான ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் நடராஜன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் ரூ.2 லட்சம் இருந்தது. இதுகுறித்து நடராஜனிடம் கேட்டபோது தனது மகன் சீட்டு நடத்துவதாகவும், சீட்டு வசூலித்த பணம் என்றும் கூறி சீட்டு மற்றும் நோட்டை காண்பித்தார். இதையடுத்து அதிகாரிகள் ரூ.2 லட்சத்தை அவரிடம் கொடுத்து விட்டு சென்றனர்.
மேலும் அயித்தாண்டஅள்ளியை சேர்ந்த செல்லப்பன் என்பவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ரூ.70 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது வங்கியில் இருந்து எடுத்து வந்த பணம் என்று கூறி வங்கி பாஸ் புத்தகத்தை காண்பித்தார். இதையடுத்து வருமான வரித்துறையினர் அந்த பணத்தை செல்லப்பனிடம் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.