தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் யுகாதி வாழ்த்து

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் யுகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Update: 2019-04-05 23:15 GMT
சென்னை,

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி திருநாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

முதல்–அமைச்சர் வாழ்த்து 

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள யுகாதி தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ‘யுகாதி’ புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.

பன்மொழி பேசும் மக்களும், பாரினில் ஒற்றுமையாக வாழலாம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், பேசும் மொழி, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டில் வேறுபட்டு இருந்தாலும், உணர்வால் ஒன்றுபட்டு, காலங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உறுதுணையாக வாழ்ந்து வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

மலரும் இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:–

தி.மு.க. ஆட்சியில் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு அதை ரத்து செய்தது. 2006–ம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற தலைவர் கருணாநிதி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மகுடம் சூட்டும் வகையில் யுகாதி புத்தாண்டுக்கு மீண்டும் விடுமுறை அளித்தார். அவர் ஆட்சியில் இருந்த போதெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான உறவில் எந்த ஒரு உராய்வும் ஏற்பட்டு விடாதவாறு போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறார் என்பதை மக்கள் அறிவார்கள்.

அண்டை மாநிலங்களில் உள்ள நாம் அனைவரும் ஒரே குடும்பமாக, உற்ற நண்பர்களாக, ஒருவருக்கொருவர் இணைபிரியாத பாசத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறோம். அனைவரும் முன்னேற வேண்டும் என்பதே நம் சீரிய நோக்கம். அந்த விசால மனப்பான்மையுடன் பாரம்பரியமிக்க திராவிட குடும்பத்தின் இனிய உறவை எவ்வித தொய்வும் இன்றி நாம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம் என்று கூறி தெலுங்கு, கன்னட மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது அன்பான யுகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ் 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–

தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதிலும், நாட்டையும், மாநிலத்தையும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடச் செய்வதிலும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. இதை உணர்ந்து அவர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:–

தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோரும், அதேபோல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து இங்கே குடியேறி தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மக்களால் யுகாதி என்கிற புத்தாண்டு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

இந்த யுகாதி புத்தாண்டில் மத, சாதி துவே‌ஷம் நீங்கி மத்தியில் நல்லாட்சி அமைந்திட உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

டி.டி.வி.தினகரன் 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:–

வசந்த காலத்தின் தொடக்கமான யுகாதி புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களைப் போல இனி யாரும் மொழி, மதம், இனம், சாதி ஆகியவற்றின் பெயரால் நம்மைப் பிரித்தாள்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று யுகாதி திருநாளில் சபதமேற்போம். புத்தாண்டில் புதுப்புது வெற்றிகள் குவியட்டும், ஆரோக்கியமும் அன்பும் நிறையட்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் ஆகியோரும் யுகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்