பெரம்பூர் தொகுதி சுயேச்சை வேட்பாளருக்கு ரூ.1¾ லட்சம் கோடி கையிருப்பு; ரூ.4 லட்சம் கோடி கடன் வேட்புமனுவில் தவறான தகவலை வெளியிட்டது ஏன்? பரபரப்பு பேட்டி
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தனக்கு ரூ.1¾ லட்சம் கோடி கையிருப்பு உள்ளதாகவும், உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை,
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தனக்கு ரூ.1¾ லட்சம் கோடி கையிருப்பு உள்ளதாகவும், உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தவறான தகவலை வெளியிட்டது ஏன்? என பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.
சொத்து விவரம்
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது பெயரிலும், மனைவி, மகன், மகள் பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துகள் குறித்த விவரங்களை வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இதன்படி, தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்கின்றனர்.
அந்தவகையில் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ் தாக்கல் செய்துள்ள சொத்து விவரம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம், அவர் தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாகவும், உலக வங்கியில் 4 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருப்பது தான்.
கோடீசுவரர்-கடனாளி
அதுமட்டுமல்லாமல் ரூ.1500 கோடி மதிப்பில் கோடநாட்டில் 600 ஏக்கர் இடம், ரூ.100 கோடி மதிப்பில் போயஸ் கார்டனில் சொகுசு பங்களா, கோபாலபுரத்தில் 6 வீடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருப்பதும் அதிகாரிகளை தலைசுற்ற வைத்துள்ளது. அவர் அளித்துள்ள தகவல் அடிப்படையில் பார்த்தால் மோகன்ராஜ் தான் இந்தியாவிலேயே கோடீஸ்வர வேட்பாளராகவும், அதிக கடனாளி வேட்பாளராகவும் கருதப்படுவார்.
யார் இந்த மோகன்ராஜ்?. அவ்வளவு பெரிய கோடீஸ்வரரா? என்று கேட்கலாம். தேர்தல் என்றாலே பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதிலும் மோகன்ராஜ் சொத்து விவரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தியாகி மகன்
சுதந்திர போராட்ட தியாகியும், தமிழக ஜனதா கட்சி தலைவராகவும் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெபமணியின் மகன் தான் மோகன்ராஜ். தந்தை மறைவுக்கு பின்பு ‘ஜெபமணி ஜனதா கட்சி’ என்ற பெயரில் தனியாக கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் மோகன்ராஜ் பதிவு செய்தார்.
இந்த கட்சி சார்பில் தற்போது பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பச்சை மிளகாய் சின்னத்தில் மோகன்ராஜ் போட்டியிடுகிறார். 67 வயதாகும் இவர், சென்னை மயிலாப்பூர் கிழக்கு அபிராமபுரத்தில் வசித்து வருகிறார்.
ரூ.24 ஆயிரம் கையிருப்பு
எல்லோரையும் தலைசுற்ற வைக்கும் வகையில் சொத்து விவரத்தில் அதுபோன்று குறிப்பிட்டது ஏன்? என்பது குறித்து அவர் கூறியதாவது:-
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த நான், 21 ஆண்டுகள் பணியாற்றினேன். கடைசியாக சி.பி.ஐ. இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை குழுவில் இருந்தேன். நான், வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் பொய்யானது.
வேண்டுமென்றே தான் தவறான தகவலை அளித்துள்ளேன். மாதம் ரூ.23 ஆயிரம் ஓய்வூதியமாக பெற்று வரும் எனக்கு வங்கியில் 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே கையிருப்பாக உள்ளது. இதுதவிர செங்கல்பட்டில் 3 கிரவுண்டு இடமும், திருவள்ளூரில் மெய்யூர் 10 ஏக்கரில் ஓர் இடமும் உள்ளது. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று இருக்கிறது. இது வங்கி கடனில் உள்ளது
தவறான தகவல்
சில ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரத்தை தவறாக தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் நான் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டுமென்றே தவறான தகவல்களை குறிப்பிட்டு பிரமாண பத்திரம் அளித்துள்ளேன்.
நான் எனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பது 2ஜி முறைகேடு வழக்கில் சுட்டிக்காட்டப்பட்ட தொகை ஆகும். உலக வங்கியில் எனக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருப்பதாக கூறி இருப்பது தமிழக அரசின் தற்போதைய கடன் நிலவரம் ஆகும். ஜெயலலிதா, கருணாநிதிக்கு இருந்து வரும் அசையா சொத்துகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே போயஸ் கார்டன் பங்களா, கோபாலபுரம் வீடு, கோடநாடு எஸ்டேட் போன்ற விவரங்களை தெரிவித்து உள்ளேன்.
வழக்கு தொடருவேன்
விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் வைகோவை எதிர்த்தும், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்தும் போட்டியிட்டு உள்ளேன். சாத்தான்குளம் இடைத்தேர்தலிலும், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு உள்ளேன். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட போது தற்போது குறிப்பிட்டது போன்றே சொத்து விவரங்களை குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
நான் வாக்கு கேட்டு செல்லும்போது, எனக்கு வாக்களித்தால் எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி அல்லது ‘மிஸ்டு கால்’ கொடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். எனக்கு பதிவான ஓட்டுக்கும், எனக்கு ஓட்டு போட்டதாக குறுஞ்செய்தி அல்லது ‘மிஸ்டு கால்’ மூலம் தகவல் தெரிவித்தவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே வேறுபாடு இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.