வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாற்றத்தை விரும்பும் மக்கள்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறேன். எல்லா இடங்களில் இருந்தும் நம்பிக்கையான தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் அதிகமாக பணம் சிக்குவது பழக்கமாகி விட்டது. இதை பார்த்து மக்கள் நீதி மய்யத்தில் உள்ளவர்களும் செலவு செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டுகின்றனர். இதையெல்லாம் செய்யக்கூடாது. அதற்காக தான் நாம் வந்துள்ளோம் என்று கூறி வருகிறேன்.
அப்படி யாராவது செய்தால் தேர்தல் கமிஷனில் காட்டி கொடுத்துவிடுவேன் என்றும் மிரட்டி கூறியுள்ளேன். கட்சியில் யாராவது ஆசை காட்டி போனால் கூட அவர்களை நீக்குவது என்ற முடிவுக்கு வந்து உள்ளோம்.
திராவிடம்
திராவிட இயக்கத்தை பின்பற்றுகிறோமோ இல்லையோ, நாம் அனைவரும் திராவிடத்தை சேர்ந்தவர்கள். 2 கட்சிகள் மட்டும் பகிர்ந்து எடுத்துக்கொள்ள திராவிடம் அப்படிப்பட்ட விஷயம் அல்ல. அது எல்லோருக்கும் சொந்தமான இனகுறிப்பு. அதை சேர்ந்தவன். என்னுடைய அறிக்கையும் திராவிட இயக்க அறிக்கையும் சேர்ந்து இருப்பது நல்லது தான். நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்வோம். உழவர் சந்தை போன்ற நல்ல விஷயங்களை யார் செய்திருந்தாலும் அதை எடுத்து இன்னும் மேம்படுத்த என்ன முடியுமோ? அதையெல்லாம் மக்கள் நீதி மய்யம் செய்து உள்ளது.
தேர்தல் ஆணையம் அனைத்து இடங்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும். காவல்துறையை ஏவல்துறையாக மாற்ற முடியும். மாறாமல் இருக்க வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும். அவர்கள் ஆட்சியாளர்களுக்கு உட்பட்டவர்கள் தானே.
வேலூர் தொகுதி தேர்தல்
ரஜினியுடன் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார். ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி வலியுறுத்த முடியாது. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்.
வேலூர் தொகுதியிலாவது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பரிந்துரைக்கும். பிடிபட்டவர்கள் எதிரணியில் உள்ளவர்களிடம் இதைவிட அதிகமாக இருப்பதாக கூறுவது சரியானதல்ல. அழுக்கு அழுக்கு தான்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.